top of page

‘குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தூக்கு மாட்டிக்கொள்கிறேன்!’ அய்யாக்கண்ணு

  • Source :http://www.vikatan.com/juniorvikatan
  • Apr 6, 2017
  • 2 min read

விவசாயக் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல கோரிக்கை களை முன்வைத்து தலைநகர் டெல்லியில், தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் கடந்த மார்ச் 12-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்கொலையின் வீரியத்தை உணர்த்த மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டும், எலிக்கறி தின்பது போலவும், அரை நிர்வாணக் கோலத்திலும், மொட்டை அடித்தும் தினம் தினம் நூதனமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் தொடங்கி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வரை பலரும் இவர்களை தினம் தினம் சந்தித்துப் பேசி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவும் பெருகிவருகிறது. இந்த நிலையில், அய்யாக்கண்ணு மீது அடுக்கடுக்கான புகார்களை பி.ஜே.பி-யினர் சொல்லி வருகின்றனர். ‘அய்யாக்கண்ணு ஒரு ஃப்ராடு’ என்று கனைக்கிறார் ஹெச்.ராஜா.

Delhi Tn Farmers Protest

யார் இந்த அய்யாக்கண்ணு? திருச்சியைச் சேர்ந்த இவர், வழக்கறிஞர். காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர். ஜனதா தளம் உடைந்த பிறகு, தேசிய விவசாயிகள் சங்கத்தைத் தொடங் கினார். பி.ஜே.பி-யின் பாரதிய கிசான் சங்கத்தில் மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், திருச்சி, சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தியவர். ‘மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்துப் போராடக் கூடாது’ என அய்யாக்கண்ணுக்கு அந்தச் சங்கம் அறிவுறுத்த... அதிலிருந்து விலகிய அய்யாக்கண்ணு, ‘தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பி.ஜே.பி-யினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். ‘‘கடந்த மார்ச் 4-ம் தேதி டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்தேன். ‘தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது; விவசாயிகள் அடகு வைத்த தாலிகளைக்கூட வங்கிகள் ஏலம் விடுகின்றன. இப்படியே போனால், நிலங்களும் ஏலம்போகும்; பிறகு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘நிச்சயமாக நான் உதவுகிறேன்’ என்றார். ஆனால், அவர் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. இப்படியான சூழலில்தான், ‘கோரிக்கைகள் நிறைவேறும்வரை டெல்லியில் போராட்டம் நடத்துவோம்’ என முடிவெடுத்தோம். அதன்பிறகு டெல்லி வந்த முதல் நாள், காவல் துறை நெருக்கடியால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், சாலையில் படுத்துறங்கி... பிச்சையெடுப்பது போல் கையேந்தி சாப்பிட்டோம். எங்கள் நிலையை உணர்ந்த டெல்லிவாழ் தமிழர்களும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், கொட்டகை போட்டுக்கொடுத்து, உணவளித்து வருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் அருண் ஜெட்லியைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். அத்துடன், வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்களையும், இறுதியாக ஜனாதிபதியையும் சந்தித்தோம்.

இப்படி தினம்தோறும் கஷ்டப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் எங்களை, மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசைச் சார்ந்த நிர்வாகிகள் சிலர் மோசமாக விமர்சிக்கிறார்கள். அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ‘ஆடி கார் அய்யாக்கண்ணு’ என்கிறார். அத்துடன், ‘அய்யாக்கண்ணுக்கு நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது; எட்டு மின் மோட்டார் இணைப்புகள் உள்ளன’ என்று சொல்லியிருக்கிறார். இது, முற்றிலும் தவறான தகவல். நான், கூட்டுறவுக் கடனைத் தவிர... வேறு எங்கும் ஒரு பைசாகூட கடன் வாங்கவில்லை. என்னிடம் இருபது ஏக்கர் நிலம் மட்டும்தான் இருக்கிறது. அவர் சொல்லும் நூறு ஏக்கர் நிலம் என்பது கற்பனையே. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால்... நான், அவர்கள் சொல்லும் இடத்திலேயே தூக்கு மாட்டிக்கொள்கிறேன். தமிழகத்தில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுபவர்களைக் கைது செய்கிறது தமிழக அரசு. எங்கள் போராட்டத்துக்குப் பெருகிவரும் ஆதரவைத் தமிழக அரசு ஒடுக்கக்கூடாது. விவசாயிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை எல்லா தலைவர்களும் வந்து சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் மட்டும் இதுவரை வந்து சந்திக்கவில்லை. அவர் வர வேண்டும். எங்களுக்காக மத்திய அரசிடம் அவர் பேச வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமர் மோடி எங்களைச் சந்தித்து, கடன் தள்ளுபடி குறித்த உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த தேர்தலில் அவர், ‘விளைபொருள்களுக்கு இரண்டு பங்கு லாபம் தருகிறேன்; நதிகளை இணைக்கிறேன்’ என்று கூறியிருந்தார். அவர் சொன்ன இந்த இரண்டு வாக்குறுதிகளுடன், எங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றும்வரை போராட்டம் தொடரும்” என்றார் வேதனையுடன். - சி.ய.ஆனந்தகுமார் படம்: தே.தீட்சித்

 
 
 

Comments


ABOUT  US ANTCOI

We are ANTCOI...

Recent Posts
Page Visits
bottom of page